தண்ணீர் என நினைத்து மண் எண்ணெய்யை குடித்த 1½ வயது குழந்தை உயிரிழந்த சோகம்
|கொல்லம் அருகே தண்ணீர் என நினைத்து மண் எண்ணெய்யை குடித்த 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பாலக்காடு:
கொல்லம் அருகே தண்ணீர் என நினைத்து மண் எண்ணெய்யை குடித்த 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கொல்லம் மாவட்டம் பையாலக்காவு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவருடைய மனைவி ரேஷ்மா. இந்த தம்பதிக்கு ஆருஷ் என்ற 1½ வயது குழந்தை இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணபிள்ளை செஞ்சேரி பகுதியில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றார்.
பின்னர் அவர்கள் மதிய உணவிற்கு பிறகு வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் ஆருஷ் தவிழ்ந்து சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த பாட்டியில் இருந்த மண் எண்ணெய்யை தண்ணீர் என நினைத்து குடித்ததாக தெரிகிறது.
இதையடுத்து ஆருஷ் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை மண் எண்ணெய் குடித்தது பரிசோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து ஆருஷ்க்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சவரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.