பலாத்காரத்தில் பிறந்த குழந்தை... தங்களுக்கு வேண்டும் என குற்றவாளியின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் விசித்திர வழக்கு
|பலாத்கார சம்பவத்தில் பிறந்த குழந்தையை தங்களிடம் ஒப்படைக்க கோரி பலாத்கார குற்றவாளியின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு தொடுத்து உள்ளனர்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசித்திர வழக்கு ஒன்று வந்தது. அதில், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் அவருக்கு குழந்தை பிறந்து உள்ளது.
இந்த நிலையில், அந்த குழந்தையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பலாத்கார குற்றவாளியின் பெற்றோர் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணைக்கு வந்ததும், நீதிபதி பி.எஸ். நரசிம்மா, நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என பலாத்கார குற்றவாளியின் பெற்றோர் தரப்பினரிடம் கேட்டு உள்ளார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறும்போது, உங்களது மகன் பலாத்காரத்திற்காக சிறையில் இருக்கிறார். நீங்கள், அந்த குழந்தை உங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இல்லையா? என கேட்டுள்ளார். அந்த தாய் இல்லையென்றால் குழந்தை எங்கிருந்து வந்திருக்கும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பெற்றோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, அது அந்த குழந்தையின் விருப்பம் சார்ந்தது நீதிபதி அவர்களே என பதிலளித்து உள்ளார்.
இதன்பின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், என்ன மாதிரியான மனுக்கள் எல்லாம் இந்த கோர்ட்டுக்கு வருகின்றன? இந்த வழக்கில் ஹேபியஸ் கார்பஸ் மனு எப்படி தாக்கல் செய்யப்படுகிறது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வழக்கு பற்றிய விவரங்கள், வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற அமர்வுக்கான இந்திய சட்ட செய்தி வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.