ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்குலாலு கட்சி எம்.பி., எம்.எல்.ஏ. வீடுகளில் சி.பி.ஐ. சோதனை
|ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு கட்சி எம்.பி., எம்.எல்.ஏ. வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
புதுடெல்லி,
ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டுவரை ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது, பாட்னாவை சேர்ந்த சிலருக்கு ரெயில்வேயில் வேலை வழங்க அவர்களிடம் இருந்து நிலம் லஞ்சமாக பெறப்பட்டது.
இவ்வழக்கில், லாலுபிரசாத் யாதவ், அவருடைய மனைவி, மகன், மகள் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக ராஷ்டிரீய ஜனதாதளத்தின் மாநிலங்களவை எம்.பி. பிரேம்சந்த் குப்தா, அக்கட்சியின் பெண் எம்.எல்.ஏ. கிரண் தேவி, அவருடைய கணவர் அருண்சிங் ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
பீகார் மாநிலம் பாட்னா, அர்ரா ஆகிய இடங்களில் உள்ள கிரண்தேவி, அருண்சிங் தொடர்புடைய சொத்துகள், பாட்னாவில் உள்ள அதிகாரபூர்வ இல்லம், சொந்த தொகுதியான சந்தேஷில் உள்ள சொத்துகள் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது. சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதுபோல், அரியானா மாநிலம் குருகிராம், ரேவாரி, டெல்லி, நொய்டா ஆகிய இடங்களில் உள்ள பிரேம்சந்த் குப்தாவின் சொத்துகளிலும் சோதனை நடந்தது.
இந்த சோதனைக்கு ராஷ்டிரீய ஜனதாதள செய்தித்தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
கர்நாடக தேர்தலில் தோல்வி அடைந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல், எதிர்க்கட்சிகள் மீது மீண்டும் விசாரணை அமைப்புகளை பா.ஜனதா ஏவிவிட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு இது ஒரு உதாரணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.