மின்கம்பத்தில் சரக்கு லாரி மோதியது; டிரைவர் சாவு
|மண்டியாவில் மதுபாட்டில்களை ஏற்றி வந்த சரக்கு லாரி மின்கம்பத்தில் மோதியதில் டிரைவர் பலியானார்.
மண்டியா;
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கவுரிபுரா அருகே பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுபானங்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தமிழகத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டினார்.
அப்போது கவுரிபுரா அருகே வந்தபோது ஏழுமலையின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தை பார்த்ததும் அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள், டிரைவர் ஏழுமலையை மீட்காமல், லாரியில் இருந்த மதுபாட்டில்களை அள்ளி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து ஸ்ரீரங்கப்பட்டணா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார், உயிரிழந்த ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து மண்டியா வழியாக மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு தமிழகம் நோக்கி சென்றபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீரங்கப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.