< Back
தேசிய செய்திகள்
திருட்டு புகாரால் மனம் உடைந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

திருட்டு புகாரால் மனம் உடைந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
23 Aug 2023 12:15 AM IST

திருட்டு புகாரால் மனம் உடைந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் வேலை பார்த்த பெண் தொழில் அதிபர் மீது கடிதத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு:-

கேரளாவை சேர்ந்தவர்

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வர்க்கீஸ் (வயது 43). டிரைவரான இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வேலை தேடி பெங்களூருவுக்கு வந்திருந்தார். பின்னர் புலிகேசிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழில் அதிபரான ஒரு பெண் வீட்டில் கார் டிரைவராக வர்க்கீஸ் வேலைக்கு சேர்ந்தார்.

அடுக்குமாடி குடியிருப்பில் மாடியில் ஷெட் அமைத்து வர்க்கீஸ் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வீட்டில் இருந்த 250 கிராம் தங்க நகைகள் திருட்டுப்போய் இருந்தது. அந்த நகைகளை கார் டிரைவர் வர்க்கீஸ் அல்லது மற்றொரு வேலைக்காரர் திருடி இருப்பதாக கூறி புலிகேசிநகர் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார்.

தற்கொலை

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துவர்க்கீசை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், தான் நகைகளை திருடவில்லை என்று கூறியுள்ளார். விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் விடுவித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவறை ஜன்னலில் தூக்குப்போட்டு வர்க்கீஸ் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

குற்றச்சாட்டு

அந்த கடிதத்தில் வர்க்கீஸ் தனது சாவுக்கு பெண் தொழில் அதிபர் தான் காரணம் என்றும், அவர் என் மீது நகைகளை திருடியதாக குற்றச்சாட்டு கூறியதாலும், போலீசார் தன்னிடம் விசாரணை நடத்தியதாலும் மனம் உடைந்து தற்கொலை முடிவை எடுப்பதாக கூறி இருந்தார். இதையடுத்து, பெண் தொழில் அதிபர் மீது புலிகேசிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்