தெருவில் நாய்க்கு உணவு அளித்த இளம்பெண் மீது கார் மோதல்; அதிர்ச்சி வீடியோ வெளியீடு
|சண்டிகரில் வீடு அருகே தெருவில் நாய்க்கு உணவு அளித்த இளம்பெண் மீது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
சண்டிகர்,
சண்டிகரில் வசித்து வரும் இளம்பெண் தேஜஸ்விதா (வயது 25). கட்டிடக்கலையில் பட்டப்படிப்பு படித்துள்ள இவர், ஆட்சி பணிக்கான நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
இவர் தனது தாயார் மன்ஜீத் கவுருடன் தினமும் தனது வீடு அருகே தெருவில் நாய்களுக்கு உணவு அளிப்பது வழக்கம். இந்நிலையில், அதுபோன்று உணவு அளித்து கொண்டிருந்த அவரை நோக்கி விரைவாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதில், பலத்த காயமடைந்த அவர் தெருவில் விழுந்து கிடந்து உள்ளார். இதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் கவுர், உதவிக்கு அழைத்தும் அவருக்கு உதவ யாரும் முனவரவில்லை.
இதனை தொடர்ந்து, வீட்டுக்கு மொபைல் போன் வழியே அழைப்பு விடுத்து விட்டு, போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உள்ளார். இதன்பின், கவுரின் மகளை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.
சிகிச்சைக்கு பின் தேஜஸ்விதா தேறி வருகிறார். கார் மோதிய அதிர்ச்சி தரும் வீடியோவை டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். சண்டிகர் டி.ஜி.பி.யை டேக் செய்து பதிவிட்ட அந்த செய்தியில், தவறான வழியில் விரைவாக வந்த வாகனம், நல்ல செயலில் ஈடுபட்டு கொண்டிருந்த சிறுமி மீது மோதி விட்டு சென்றுள்ளது.
அவருக்காக நான் இறைவனை வேண்டி கொள்கிறேன். கார் ஓட்டுனர் குடித்து விட்டு வாகனம் ஓட்டி சென்றுள்ளாரா? என அவர் கேள்வியும் கேட்டுள்ளார். இந்த விசயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு அவர் கோரிக்கையும் விடுத்து உள்ளார்.