மகளின் பிறந்தநாளில் 1 லட்சம் பானிபூரிகளை இலவசமாக வழங்கிய வியாபாரி
|பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டாட முடிவு செய்தார்.
போபால்,
மத்திய பிரதேச தலைநகர் போபாலை சேர்ந்தவர் ஆஞ்சல் குப்தா. பானிபூரி வியாபாரியான இவரது மகள் அனோகிக்கு நேற்று முன்தினம் 1 வயது பூர்த்தியானது.
மகளின் பிறந்த நாளை அடுத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டாட முடிவு செய்தார், ஆஞ்சல் குப்தா. அதாவது பெண் குழந்தைகளை வளர்ப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற மத்திய அரசின் திட்டத்தை அனைவரிடமும் எடுத்து செல்லும் நோக்கில் சிறப்பு நடவடிக்கை ஒன்றை அவர் மேற்கொண்டார்.
அதன்படி அருகில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் மிகப்பெரிய கூடாரம் அமைத்து 1.01 லட்சம் பானிபூரிகளை தயாரித்து மக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்தார். இது அக்கம்பக்கத்தினரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஆஞ்சல் குப்தாவின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் உள்ளூர் எம்.எல்.ஏ. ரமேஷ்வர் சர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அத்துடன் இந்த நடவடிக்கையை முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானும் பாராட்டினார்.