பெங்களூரு விமான நிலையத்தில் பஸ் மோதி விபத்து
|பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளை அழைத்து வந்த பஸ், அங்கிருந்த தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர்.
பெங்களூரு:-
விமான நிலையத்தில்...
பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் மொத்தம் 2 முனையங்கள் உள்ளன. அவற்றில் 2-வது முனையத்தை கடந்த ஆண்டு(2022) பிரதமர் மோடி திறந்து வைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். குறிப்பிட்ட சில விமானங்கள் 2-வது முனையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமானம் ஏறுவதற்கு செல்லும் பயணிகளை முதல் முனையத்தில் இருந்து 2-வது முனையம் வரை, விமான நிலையம் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் அழைத்து வருவார்கள்.
இதற்கிடையே நேற்று அதிகாலையில் விமானம் ஒன்று பெங்களூருவில் வந்திறங்கியது. இதில் வந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் ஒன்று முதல் முனையம் நோக்கி வந்தது. இதில் பயணிகள் 15 பேர் மற்றும் ஊழியர்கள் 2 பேர் இருந்தனர். அந்த பஸ் 2-வது முனையத்தின் வெளிப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் தறிகெட்டு ஓடிய பஸ், விமான நிலைய தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
டிரைவரின் கவனக்குறைவு
மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயம் அடைந்த பயணிகள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் குழந்தை உள்பட 10 பயணிகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து விமான நிலைய நிர்வாகம், 'அதிகாலை நேரத்தில் பயணிகளை ஏற்றி வந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவரின் கவனக்குறைவு தான் விபத்து காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. இதுதொடர்பாக பஸ்சை நிர்வகித்து வரும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது' என தெரிவித்துள்ளது. மேலும் இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காத வண்ணம் பார்த்து கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.