< Back
தேசிய செய்திகள்
பொன்னம்பேட்டையில் ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானை உயிருடன் மீட்பு; துபாரே முகாமுக்கு அனுப்பி வைப்பு
தேசிய செய்திகள்

பொன்னம்பேட்டையில் ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானை உயிருடன் மீட்பு; துபாரே முகாமுக்கு அனுப்பி வைப்பு

தினத்தந்தி
|
11 Aug 2022 9:19 PM GMT

பொன்னம்பேட்டையில், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குட்டியானை உயிருடன் மீட்கப்பட்டது. அந்த யானை, துபாரே முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

குடகு:

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குட்டியானை

குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆறு மற்றும் குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.

இ்தேபோல் பொன்னம்பேட்டை அருகே ஓடும் ராமதீர்த்தா ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த ஆற்றில் வனப்பகுதியில் உள்ள காட்டுயானைகள், புலிகள், சிறுத்தை ஆகிய வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக வந்து செல்கின்றன. நேற்று முன்தினம் கொட்டும் மழையிலும் சில காட்டுயானைகள் குட்டா மலைப்பகுதியில் உள்ள ராமதீர்த்தா ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக வந்தது. அப்போது 2 மாத குட்டி ஆண் யானை ஒன்று தண்ணீர் குடிக்கும் போது ஆற்றில் கால் தவறி விழுந்தது. இதில் அந்த குட்டி யானை ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டது.

பத்திரமாக மீட்பு

நேற்று காலை அந்த குட்டியானை, குட்டா அருகே மஞ்சள்ளி கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தின் அருகே உள்ள புதரில் சிக்கிக்கொண்டு பிளிறியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஓடி வந்து குட்டி யானையை மீட்டு பால் புகட்டி சாப்பிட பழங்கள் கொடுத்தனர்.

பின்னர் நாகரஒலே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் கால்நடை டாக்டரை வரவழைத்து குட்டியானையின் உடல் நிலையை பரிசோதனை செய்தனர். அதில் குட்டியானை சற்று உடல் நலக்குறைவுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வனத்துறை அதிகாரிகள், ஜீப்பில் ஏற்றிக்கொண்டு துபாரே யானை முகாமில் கொண்டு சென்றுவிட்டனர். அங்கு குட்டியானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்