மராட்டியத்தில் 60 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு - அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு
|சந்திரபூர் நகரில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலம் சந்திரபூர் நகரில் உள்ள குட்காலா வார்டு பகுதியில், குந்தன் பட்டேல் என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இது சுமார் 60 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கட்டடம் பாழடைந்து காணப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அதில் குடியிருப்புகளை அமைக்க கூடாது என அதன் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கடந்த ஜூலை மாதமே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் கட்டடத்தின் உரிமையாளர்கள் அதனை புறக்கணித்துவிட்டு, தொடர்ந்து அங்கு பல்வேறு நபர்களை வாடகைக்கு குடி அமர்த்தியுள்ளனர்.
இந்த சூழலில் இந்த கட்டடம் நேற்று மாலை திடிரென குலுங்கியுள்ளது. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் அப்பளம் போல இடிந்து தரைமட்டமாகி விட்டது. கட்டடம் இடிந்த சமயத்தில் அதன் உள்ளே யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஆனால் கட்டடம் இடிந்த சமயத்தில், 45 வயது பெண் ஒருவர் தனது செல்போனை எடுப்பதற்காக கட்டடத்தை நெருங்கி சென்றுள்ளார். அப்போது இடிபாடுகளில் சிக்கி அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கட்டடத்தின் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.