பணம் திருட்டு சந்தேகத்தில் 5-ம் வகுப்பு மாணவிக்கு காலணி மாலை போட்டு ஊர்வலம்
|மத்திய பிரதேசத்தில் பணம் திருடு போன சந்தேகத்தில் 5-ம் வகுப்பு மாணவிக்கு காலணி மாலை போட்டு ஊர்வலம் அழைத்து சென்ற அவலம் நடந்துள்ளது.
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் பெடுல் மாவட்டத்தில் தம்ஜிபுரா கிராமத்தில் பழங்குடியினருக்கான அரசு மகளிர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், தங்கி படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவியை சந்திக்க சென்ற தந்தையிடம் மாணவி பேசாமல் இருந்துள்ளார்.
இதனால், என்னவென விசாரித்ததில், சக மாணவியிடம் இருந்து ரூ.400 பணம் திருடி விட்டாய் என கூறி இந்த மாணவிக்கு விடுதியில் வைத்து, செருப்பு மாலை அணிவித்து உள்ளனர். அதன்பின்பு, போய் போன்று வேடமிட்டு விடுதியில் ஊர்வலம் போக செய்துள்ளனர்.
இதனை விடுதி சூப்பிரெண்டு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இதுபற்றி மாவட்ட கலெக்டர் அமன்வீர் சிங் பெய்ன்சிடம் சிறுமியின் தந்தை புகாராக தெரிவித்து உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதன்பின்பு பழங்குடி விவகார துறை உதவி ஆணையாளரான சில்பா ஜெயின், சம்பவத்தில் ஈடுபட்ட விடுதி சூப்பிரெண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர், விடுதியில் தங்கமாட்டேன் என சிறுமி கூறியுள்ளார்.