ரூ.20 அதிகமாக வசூலித்த ரெயில்வே: 22 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த நீதி- நெகிழ்ச்சி சம்பவம்
|22 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கறிஞர் நடத்திய சட்ட போராட்டத்திற்கு தற்போது நீதி கிடைத்துள்ளது.
லக்னோ,
கடந்த 1999 ஆம் ஆண்டு ரயில் பயணச்சீட்டு வாங்கிய போது 20 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டதற்கு வழக்கறிஞர் ஒருவர் நடத்திய சட்ட போராட்டத்திற்கு தற்போது நீதி கிடைத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வசிக்கும் துங்கநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் 1999இல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்திலிருந்து மொராதாபாத்துக்கு செல்ல ரயிலில் பயணித்துள்ளார்.
அப்போது அவரிடம் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஊழியர் ஒருவர் 20 ரூபாய் அதிகமாக வசூலித்துள்ளார். ஒரு டிக்கெட்டின் விலை 35 என்ற விதம் 2 டிக்கெட்க்கு 70 ரூபாய் வசூலிக்காமல் டிக்கெட் முன்பதிவு ஊழியர் 90 ரூபாய் வசூலித்துள்ளார். இதனை எதிர்த்து கேள்வி கேட்ட போது அவருக்கு அப்போது நீதி கிடைக்கவில்லை.
எனவே அவர் அப்போது மதுராவிலுள்ள நுகர்வோர் கோர்ட்டில் கோரக்பூர் ரயில்வே மற்றும் அதிக கட்டணம் வசூலித்த ஊழியர் மேல் வழக்குப் பதிவு செய்தார். கடந்த 22 வருடமாய் நடந்த இந்த வழக்கில் அவருக்கு தற்போது நீதி கிடைத்துள்ளது.
இது தொடர்பாக கோர்ட்டு அளித்த தீர்ப்பில் "1999இல் வசூலித்த 20 ரூபாய்க்கு 12% வட்டி 22 ஆண்டுகளுக்குப் வீதம் 15,000 ரூபாய் இழப்பீடு தொகையை இந்திய ரெயில்வே துங்கநாத் சதுர்வேதியிடம் அளிக்க வேண்டும். அதனை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வட்டி விகிதம் 15% சதவீதமாக மாற்றப்படும்" என தீர்ப்பளித்தது.
தற்போது 66 வயதாகும் சதுர்வேதி தீர்ப்பு குறித்து கூறுகையில், இழப்பீட்டுத் தொகை சிறியது என்றும், வழக்கை எதிர்த்து அவர் செலவழித்த ஆண்டுகளை ஈடுசெய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார். பணத்தை விட நீதி குறித்த போராட்டம் தான் பெரிதாக பார்க்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார். இவரின் இந்த 22 ஆண்டுகால சட்டப்போராட்ட வெற்றி பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.