< Back
தேசிய செய்திகள்
வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: மர்ம ஆசாமி வெறிச்செயல்
தேசிய செய்திகள்

வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: மர்ம ஆசாமி வெறிச்செயல்

தினத்தந்தி
|
16 May 2024 5:29 AM IST

சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

காசர்கோடு,

கேரள மாநிலம் காசர்கோடு அருகே ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் 10 வயது சிறுமி நேற்று அதிகாலை உறங்கி கொண்டிருந்தாள். அப்போது சிறுமியின் தாத்தா பசு மாட்டில் பால் கறப்பதற்காக, கதவை திறந்து வைத்து விட்டு பின்புற வாசல் வழியாக மாட்டு தொழுவத்திற்கு சென்றிருந்தார்.

அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து, அங்கு படுக்கையில் தூங்கி கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்றார். வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமி காதில் அணிந்திருந்த ½ பவுன் கம்மல்களை அந்த நபர் திருடி கொண்டு, சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்று விட்டார்.

இதையடுத்து சிறுமி அருகே உள்ள வீட்டின் கதவை தட்டி, தன்னை யாரோ கடத்தி வந்து விட்டதாக கூறினாள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிறுமியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து குடும்பத்தினர் அங்கு சென்று சிறுமியை மீட்டு வந்தனர். சிறுமிக்கு நேர்ந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் சிறுமியை காஞ்சங்காடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது தெரியவந்தது. இதுதொடர்பாக காசர்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிஜோய், இன்ஸ்பெக்டர் ஆசாத் மற்றும் போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து, மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

கேரளாவில் உறங்கி கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்