< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்றத்துக்கு 4-வது கட்ட தேர்தல்-96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்துக்கு 4-வது கட்ட தேர்தல்-96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

தினத்தந்தி
|
12 May 2024 8:30 AM IST

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

543 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 66.14 சதவீத வாக்குகள் பதிவானது.

2-ம் கட்டமாக கடந்த மாதம் 26-ந் தேதி 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 66.71 சதவீத ஓட்டுகள் பதிவாகின. 3-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 65.68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.3 கட்ட தேர்தலும் அமைதியாக முடிந்த நிலையில் 4-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

4-ம் கட்ட தேர்தல் ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 96 தொகுதிகளில் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.இதில் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவந்தலா தொகுதியிலும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியிலும், ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியிலும் களம் காண்கிறார்கள். இதேபோல் ஒடிசா மாநில சட்டசபைக்கும் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு மொத்தம் 147 தொகுதிகள் உள்ளன.

மேலும் செய்திகள்