< Back
தேசிய செய்திகள்
லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 9 வீரர்கள் பலி - ராஜ்நாத் சிங் இரங்கல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 9 வீரர்கள் பலி - ராஜ்நாத் சிங் இரங்கல்

தினத்தந்தி
|
19 Aug 2023 10:38 PM IST

ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 9 வீரர்கள் பலியான சம்பவத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

லே,

லடாக் யூனியன் பிரதேசம் கரு ஹரிசன் பகுதியில் இருந்து கியாரி பகுதிக்கு ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். கியாரி நகருக்கு 7 கிலோமீட்டர் தொலைவு இருக்கும்போது மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் அந்த வாகனத்தில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மற்ற வீரர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுதொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், "ஏஎல்எஸ் (அசோக் லேலண்ட் ஸ்டாலியன்) வாகனம், லேயிலிருந்து நியோமாவுக்குச் செல்லும் வாகனத்தின் ஒரு பகுதியாக, கியாரிக்கு ஏழு கிமீ தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் சுமார் 5:45-6 மணியளவில் சறுக்கியது. அந்த வாகனத்தில் 10 ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். இதில் ஒன்பது பேர் உயிரிழ்ந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 9 வீரர்கள் பலியான சம்பவத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "லடாக்கில் லே அருகே நடந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. நமது தேசத்திற்கு அவர்களின் முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்த ஊழியர்கள் கள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று அதில் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்