மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 9 பேர் பலி
|மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
போபால்,
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மத்தியப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் விதிஷா மாவட்டத்தில் 4 பேர், சத்னா மாவட்டத்தில் 4 பேர், குணா மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 9 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர்.
விதிஷா மாவட்டத்திலுள்ள அகசோத் கிராமத்தில் நேற்று மாலை மழையின் போது மரத்தின் அடியில் ஒதுங்கியிருந்த, கலு மாளவியா, ராமு, குட்டா மற்றும் பிரபு லால் ஆகிய 4 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். சத்னாவில், போடி-படவுரா மற்றும் ஜட்வாரா பகுதியைச் சேர்ந்த அஞ்சனா, சந்திரா, ராஜ்குமார், ராம்குமார் ஆகிய நான்கு பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
மேலும் 12 மற்றும் 16 வயது சிறுவர்கள் இருவர் மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணா மாவட்டம் போரா கிராமத்தைச் சேர்ந்த மனு அஹிர்வார் என்ற பெண்ணும் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
இன்றும் மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.