மூளையில் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தையை, சிர்சியில் இருந்து சிவமொக்காவுக்கு 80 நிமிடத்தில் அழைத்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்
|144 கிலோ மீடடர் தூரத்தை 80 நிமிடத்தில் கடந்து மூளை தொற்றால் பாதித்த குழந்தை உயிரை ஆம்புலன்ஸ் டிரைவர் காப்பாற்றினார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
சிவமொக்கா:
144 கிலோ மீடடர் தூரத்தை 80 நிமிடத்தில் கடந்து மூளை தொற்றால் பாதித்த குழந்தை உயிரை ஆம்புலன்ஸ் டிரைவர் காப்பாற்றினார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
2 வயது குழந்தை
உத்தரகன்னடா மாவட்டம் சிர்சியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு மூளையில் தொற்று ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதை கண்டறிந்த டாக்டர்கள் உடனடியாக அந்த குழந்தையை சிவமொக்காவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்படி குழந்தையின் பெற்றோரிடம் கூறினர்.
அதன்பேரில் அவர்கள் இதுபற்றி ஆஸ்பத்திரி நிர்வாகம் மூலம் போலீசாரின் உதவியை நாடினர். அதையடுத்து போலீசார் தடையில்லா போக்குவரத்து(ஜீரோ டிராபிக்) ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.
தடையில்லா போக்குவரத்து
அதன்பேரில் நேற்று காலையில் சிர்சியில் இருந்து சாகர் வழியாக சிவமொக்கா டவுன் வரையில் போலீசார் தடையில்லா போக்குவரத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இதன்மூலம் சிர்சியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை, அதன் பெற்றோர் கொண்டு வந்தனர். ஆம்புலன்சை டிரைவர் இம்ரான் ஓட்டினார்.
ஆம்புலன்சின் முன்பு உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் தலைமையில் ஒரு ஜீப் சென்றது. அதில் போலீஸ்காரர்களும் இருந்தனர். அவர்கள் ஆம்புலன்சை பாதுகாப்பாக சிவமொக்கா டவுன் வரை கொண்டு வந்து விட்டனர்.
80 நிமிடங்களில்...
தற்போது அந்த குழந்தைக்கு சிவமொக்கா டவுனில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிர்சியில் இருந்து சிவமொக்காவுக்கு 144 கிலோ மீட்டர் தூரம் ஆகும். சாதாரண நேரத்தில் இந்த தூரத்தை அவ்வழியாக கடப்பதற்கு 2.30 மணி நேரம் ஆகும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் நேற்று தடையில்லா போக்குவரத்து மூலம் சிர்சியில் இருந்து புறப்பட்ட அந்த ஆம்புலன்ஸ் வெறும் 80 நிமிடங்களில் சிவமொக்காவை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
அதிவேகமாகவும், பாதுகாப்பாகவும் ஆம்புலன்சை ஓட்டிய டிரைவருக்கும், தடையில்லா போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்து கொடுத்த போலீசாருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.