ஐரோப்பிய, வடஅமெரிக்க மொத்த மக்கள் தொகைக்கு இணையான 80 கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டது; மத்திய மந்திரி ஜெய்சங்கர்
|ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்காவின் மொத்த மக்கள் தொகைக்கு இணையான 80 கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் 9 ஆண்டு கால மோடி அரசு பற்றிய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று டெல்லியில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, பிரதம மந்திரி கரீப் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் 80 கோடி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையாகும் என கூறினார்.
பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் 40 கோடி மக்கள் பயனடைந்தனர். இது, ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகை ஆகும். ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 15 கோடி மக்கள் பயனடைந்து உள்ளனர். இது ஜப்பான் நாட்டின் மக்கள் தொகை ஆகும்.
ஒட்டுமொத்த ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு உணவு வழங்க கூடிய, ஐரோப்பாவிற்கு நிதியுதவி வழங்க கூடிய, ஜப்பானுக்கு வீடுகளை வழங்க கூடிய, ஜெர்மனியின் சமையல் பழக்கங்களை மாற்ற கூடிய மற்றும் ஒட்டுமொத்த ரஷியாவுக்கும் மின்சார இணைப்பு வழங்க கூடிய பிரதமரை இந்த நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர் என அவர் பேசியுள்ளார்.