< Back
தேசிய செய்திகள்
8 ஆண்டுகளில் அமைதியின்மை, ஊழலுக்கு சிவப்பு அட்டை காட்டி இருக்கிறோம்:  பிரதமர் மோடி பேச்சு
தேசிய செய்திகள்

8 ஆண்டுகளில் அமைதியின்மை, ஊழலுக்கு சிவப்பு அட்டை காட்டி இருக்கிறோம்: பிரதமர் மோடி பேச்சு

தினத்தந்தி
|
18 Dec 2022 2:50 PM IST

பிரதமர் மோடி ஷில்லாங்கில் பேசும்போது, கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கில் அமைதியின்மை, ஊழலுக்கு சிவப்பு அட்டை காட்டி இருக்கிறோம் என பேசியுள்ளார்.



ஷில்லாங்,


பிரதமர் மோடி மேகாலயாவுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் இன்று காலை நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் கவர்னர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். மேலும் அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மற்றும் திரிபுரா மாநிலங்களை இணைக்கும் 6 சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ஷில்லாங் தொழில் நுட்ப பூங்காவின் 2-ம் கட்ட பணிகளுக்கும், துராவில் ஒருங்கிணைந்த மருத்துவமனை மற்றும் கன்வென்சன் மையத்திற்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் நிறைவடைந்த பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.

இதன்பின்னர் ஷில்லாங்கில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அவர் பங்கேற்றார். கால்பந்து மைதானத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள் முன் அவர் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசும்போது கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி தனது செய்தியை பகிர்ந்து கொண்டார்.

அவர், கால்பந்து போட்டியின்போது வீரர்கள் யாரேனும் விளையாட்டு உணர்வுக்கு எதிராக செயல்பட்டால், அவர்களுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

அதே வழியில், வடகிழக்கில் கடந்த 8 ஆண்டுகளாக வளர்ச்சியின்மை, ஊழல், அரசியல் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றுக்கு நாம் சிவப்பு அட்டை வழங்கியிருக்கிறோம் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், வடகிழக்கு பகுதியில் விளையாட்டை வளர்ச்சி அடைய செய்வதற்கான பணியில் தனது அரசு கவனம் செலுத்தி வருகிறது என கூறியதுடன், நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் மற்றும் 90 பெரிய விளையாட்டு திட்ட பணிகள் வடகிழக்கில் நடைபெற உள்ளன என்றும் கூறியுள்ளார்.

கத்தாரில் உலக கோப்பை இறுதி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், ஷில்லாங்கில் கால்பந்து மைதானத்தில், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பேரணியில் நான் கலந்து கொண்டுள்ளேன்.

கத்தாரில் கால்பந்து போட்டிகள் நடக்கின்றன. இங்கே நாம் வளர்ச்சிக்கான போட்டியில் இருக்கிறோம். நாம் இன்று வெளிநாட்டு கால்பந்து அணிக்காக உற்சாக குரல் கொடுத்து வருகிறோம்.

ஆனால், அதுபோன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளை நாம் நடத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என நான் உங்களுக்கு உறுதியளித்து கொள்கிறேன். நமது மூவர்ண கொடியும் உயர பறக்கும். நாம், நமது சொந்த அணிக்காக உற்சாக குரல் எழுப்புவோம் என்று கூறினார்.

2014-ம் ஆண்டுக்கு முன் வாரத்திற்கு 900 விமானங்கள் மட்டுமே மக்களின் பயணத்திற்கு இருக்கும். ஆனால், தற்போது வாரத்திற்கு 1,900 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால், கிரிஷி உதான் யோஜனா திட்டத்தின் வழியே வடகிழக்கு விவசாயிகள் விமான பயணம் மேற்கொண்டு, தங்களது விளை பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய உதவுகிறது என்றும் அவர் பேசியுள்ளார்.

வடகிழக்கில் மோதல்களை தடுத்து அமைதியை உறுதி செய்யும் பணியையும் மேற்கொண்டு உள்ளோம். கிராமப்புற வளர்ச்சி பணிகள், சாலை இணைப்பு, இணையவசதி உள்ளிட்டவற்றையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்