தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் கைது; ரூ.3 கோடி சந்தன மரத்துண்டுகள், எண்ணெய் பறிமுதல்
|பெங்களூருவில் சந்தன மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு: பெங்களூருவில் சந்தன மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கைது
பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குமரகிருபா ரோட்டில் உள்ள கோல்ப் மைதானத்தில் வளர்ந்து நின்ற சந்தன மரங்களை சமீபத்தில் மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்றிருந்தனர். இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், ஐகிரவுண்டு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தன மரங்களை வெட்டி கடத்தி விற்கும் கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தார்கள்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த கோவிந்தசாமி (வயது 30), மாது என்ற மாதா (36), வெங்கடேஷ் (22), பெங்களூருவை சேர்ந்த் ராமசந்திரா (29) என்று தெரிந்தது. இவர்கள் 4 பேரும் ஐகிரவுண்டு, சதாசிவநகர், ஜெயநகர் ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் நிற்கும் சந்தன மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது.
ரூ.3 கோடி மதிப்பு
இவ்வாறு திருடும் சந்தன மரங்களை தமிழ்நாட்டை சேர்ந்த வரதராஜ் (66), பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையை சேர்ந்த வாசிம் பேக் (35), சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசந்திரப்பா (54), ஆந்திராவில் எண்ணெய் தொழிற்சாலை நடத்தி வரும் நஞ்சேகவுடா (72) ஆகிய 4 பேரிடமும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவ்வாறு திருட்டு சந்தன மரங்கள் மூலமாக நஞ்சேகவுடா தான் நடத்தி வரும் எண்ணெய் தொழிற்சாலையில், சந்தன எண்ணெய் தயாரித்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, வாசிம் பேக், ராமசந்திரப்பா, வரதராஜ், நஞ்சேகவுடா ஆகிய 4 பேரையும் ஐகிரவுண்டு போலீசார் கைது செய்தார்கள். கைதான 8 பேரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 730 கிலோ சந்தன மரத்துண்டுகள், 147 கிலோ சந்தன எண்ணெய் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 8 பேரும் கைதாகி இருப்பதன் மூலம் பெங்களூருவில் பதிவாகி இருந்த 8 சந்தன மரங்கள் கடத்தல் வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது. கைதான 8 பேர் மீதும் ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.