< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: 10 பேர் காயம் - நிவாரணம் அறிவிப்பு

தினத்தந்தி
|
2 Jan 2023 7:34 AM IST

ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

பாலி,

ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயிலின் எட்டு பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் பாந்த்ரா முனையத்திலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், அதிகாலை 3.27 மணியளவில் ஜோத்பூர் மண்டலத்தின் ராஜ்கியவாஸ்-போமத்ரா பிரிவுக்கு இடையே ரெயில் தடம் புரண்டது.

இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் ரெயில்வே மூலம் விபத்து நிவாரண ரெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வடமேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறும்போது, உயர் அதிகாரிகள் விரைவில் சம்பவ இடத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடமேற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் ஜெய்ப்பூரில் உள்ள தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அறையில் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார்.

மேலும் அவர், எக்ஸ்பிரஸ் ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் 11 பெட்டிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். சிக்கித் தவிக்கும் பயணிகள் தங்கள் இடங்களுக்குச் செல்லும் வகையில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரெயிலில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், "மார்வார் சந்திப்பில் இருந்து புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் ரெயிலுக்குள் அதிர்வு சத்தம் கேட்டது. 2-3 நிமிடங்களுக்குப் பிறகு ரெயில் நின்றது. கீழே இறங்கி பார்த்த போது, 8 பெட்டிகள் தடம் புரண்டிருந்தது. 15-20 நிமிடங்களில் ஆம்புலன்ஸ்கள் வந்தன" என்று கூறினார்.

இந்த நிலையில் பயணிகள் மற்றும் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜோத்பூருக்கு: 02912654979, 02912654993, 02912624125, 02912431646

பாலி மார்வாருக்கு: 02932250324

மேலும், பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 138 மற்றும் 1072-ஐ தொடர்பு கொண்டு எந்த தகவலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 4 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு ரெயில் திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பாந்த்ரா-ஜோத்பூர் சூர்யநகரி எக்ஸ்பிரஸ் விபத்தையடுத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உதவியும் அனைத்து அவசர உதவிகளும் சரியான நேரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடுமையான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்