இந்தியாவில் புதிய வகை கொரோனா 76 பேருக்கு பாதிப்பு
|இந்தியாவில் ‘எக்ஸ்பிபி.1.16’ என்ற புதிய வகை கொரோனா 76 பேருக்கு பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது.
புதிய வகை கொரோனா
சீனாவில் உகான் நகரத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா பாதிப்பு இன்னும் தொடர்கதையாய் நீடிக்கிறது. புதிய உரு மாறிய கொரோனா உருவாகிக்கொண்டே வருகிறது. இந்த புதிய வகை கொரோனாவின் வெளிப்பாட்டுக்கு நமது நாடும் விதிவிலக்கல்ல.
நமது நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 100 என்ற அளவுக்குள் கட்டுப்பட்டு வந்த நிலை இப்போது மாறி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தொற்றால் உயிர்ப்பலி குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்றாலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த மாநில அரசுகளை மத்திய அரசு உஷார்படுத்தியது.
76 பேருக்கு புதிய கொரோனா
இந்த நிலையில் புதிய வகை கொரோனாவான எக்ஸ்பிபி.1.16, நமது நாட்டில் 76 மாதிரிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, 76 பேருக்கு இந்த வைரஸ் தாக்கி உள்ளது. இதை மத்திய அரசின் அமைப்பான 'இன்சாகாக்' தெரிவித்துள்ளது. இதன்படி, கர்நாடகத்தில் 30 பேரும், மராட்டியத்தில் 29 பேரும், புதுச்சேரியில் 7 பேரும், டெல்லியில் 5 பேரும், தெலுங்கானாவில் 2 பேரும், குஜராத், இமாசலபிரதேசம், ஒடிசாவில் தலா ஒருவரும் இந்த புதிய வகை கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
முதன் முதலாக இந்த வைரஸ் நமது நாட்டில், கடந்த ஜனவரி மாதம் 2 பேருக்கு தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 59 பேருக்கு பாதித்தது தெரிய வந்தது. இந்த மாதத்தில் இதுவரை 15 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று அதிகரிக்க காரணம்
சமீபத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதற்கு இந்த புதிய வகை கொரோனாவே காரணம் என பல்வேறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், இதையொட்டி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறும்போது, "கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க காரணம், 'எக்ஸ்பிபி.1.16' வைரஸ்தான். இன்புளுவன்சா காய்ச்சல் பெருகக்காரணம் எச்3என்2 வைரஸ்தான். கொரோனா கால நடைமுறைகளை அப்படியே பின்பற்றுவது இந்த வைரஸ்கள் மேலும் பரவுவதை கட்டுப்படுத்த உதவும்" என தெரிவித்தார்.