இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: பெங்களூருவில் கோலாகல ஏற்பாடுகள்
|பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பெங்களூருவில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெங்களூரு: பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பெங்களூருவில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஈத்கா மைதானம்
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் ஈத்கா மைதானம் அமைந்துள்ளது. அங்கு முஸ்லிம் சமூகத்தின் கட்டமைப்பு சுவரும் இருக்கிறது. ரம்ஜான் உள்ளிட்ட தங்களின் பண்டிகையின்போது முஸ்லிம்கள் அங்கு ஒன்றுகூடி கூட்டு தொழுகை நடத்துவது வழக்கம். அது இன்று வரை ஈத்கா மைதானம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் சமீபத்தில் சில இந்து அமைப்புகள், ஹலால் இறைச்சியை புறக்கணிக்க வேண்டும், இந்து ஆன்மிக தலங்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
அந்த வரிசையில் பெங்களூரு ஈத்கா மைதானத்தில் இந்து பண்டிகைகள் கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என்று சில இந்து அமைப்புகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கடிதம் அளித்தன. வக்பு வாரியம் மாநகராட்சி அதிகாரிகளிடம் கடிதம் வழங்கி ஈத்கா மைதானம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறியது.
வக்பு வாரியம் எதிர்ப்பு
வக்பு வாரியத்தின் கடிதத்தை மாநகராட்சி அதிகாரிகள் நிராகரித்தனர். மேலும் ஈத்கா மைதானம் மாநில அரசின் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்று அறிவித்தனர். இதற்கு வக்பு வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஈத்கா மைதானம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், சாம்ராஜ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜமீர்அகமதுகான், சர்ச்சைக்குரிய ஈத்கா மைதானத்தில் தேசிய கொடி ஏற்றுவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
அதனை தொடர்ந்து மாநில அரசு சார்பில் ஈத்கா மைதானத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 15-ந் தேதி (இன்று) அரசு சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் உதவி கலெக்டர் தேசிய கொடியை ஏற்றுவார் என்று அரசு கூறியது. இதனால் ஏதாவது பிரச்சினை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் போலீசார், ஆயுதப்படை, அதிரடிப்படை போலீசார் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விட்டு கொடுக்க மாட்டோம்
அவர்கள் அங்குள்ள தெருக்களில் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். முதல் முறையாக ஈத்கா மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது.
முதல் முறையாக ஈத்கா மைதானத்தில் சுதந்திர விழா அரசின் வருவாய்த்துறை சார்பில் நடத்தப்படுகிறது. இதில் உதவி கலெக்டர் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் அங்கு தேசிய கொடி ஏற்றவும் முடிவு செய்துள்ளோம். நாங்கள் அரசு நிலத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டோம்" என்றார்.
மானேக்ஷா மைதானம்
அதே போல் பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி அந்த மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தின விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அங்கு 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூரு மாநகர் முழுவதும் சுதந்திர தின பவள கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. மாணவ-மாணவிகள், பல்வேறு அமைப்பினர்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பு மக்களும் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநகர் முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இது தவிர நகரில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க பெங்களூரு நகர் முழுவதும் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.