ரூ.22 கோடி மோசடி வழக்கு: குஜராத் முன்னாள் மந்திரிக்கு 7 ஆண்டு ஜெயில்
|ரூ.22 கோடியே 50 லட்சம் மோசடி வழக்கில் குஜராத் முன்னாள் மந்திரிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆமதாபாத்,
குஜராத்தில், 1996-ம் ஆண்டு, சங்கர்சிங் வகேலா அரசில் மந்திரியாக இருந்தவர் விபுல் சவுத்ரி.
இவர், 2014-ம் ஆண்டு, அமுல் பால் பொருட்களை தயாரிக்கும் குஜராத் கூட்டுறவு பால் வாணிப கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். துத்சாகர் பால்பண்ணையின் தலைவராகவும் இருந்தார்.
அப்போது, வறட்சியால் பாதிக்கப்பட்ட மராட்டிய மாநிலத்துக்கு ரூ.22 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கால்நடை தீவனங்களை அனுப்பி வைத்தார். டெண்டர் விடாமலும், பால்பண்ணை வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாமலும் தன்னிச்சையாக அவர் அனுப்பி வைத்ததாக மாநில அரசு குற்றம் சாட்டியது.
7 ஆண்டு ஜெயில்
எனவே, அரசுக்கு ரூ.22 கோடியே 50 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக விபுல் சவுத்ரி உள்பட 15 பேர் மீது கடந்த 2014-ம் ஆண்டு மெசானா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இரு பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இந்த வழக்கு, மெசானாவில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் ஒய்.ஆர்.அகர்வால் தீர்ப்பு அளித்தார்.
விபுல் சவுத்ரி உள்பட 15 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தார். அவர்களுக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.