கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 75 பிட்காயின் மோசடி வழக்குகள் பதிவு
|கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 75 பிட்காயின் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 6 வழக்குகளில் மட்டுமே தீர்வு கிடைத்து உள்ளது.
பெங்களூரு:
பிட்காயின் மோசடி
கர்நாடக அரசின் இணையதளம், பல்வேறு தனியார் நிறுவனங்களின் இணையதளத்தை முடக்கி பணம் சம்பாதித்ததுடன், அரசு, தனியர் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுத்தியதாக பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்கிற ஸ்ரீகி என்பவரை போலீசார் கைது செய்து இருந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பிட்காயின் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த வழக்கில் அவரை கைது செய்த போலீசார் பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். பிட்காயின் முறைகேட்டில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
75 வழக்குகள் பதிவு
இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 75 பிட்காயின் மோசடி வழக்குகள் பதிவாகி இருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் 71 வழக்குகள் பெங்களூரு நகரில் மட்டும் பதிவாகி உள்ளது. பெலகாவி மாவட்டம் மாலமாருதி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், உப்பள்ளி கமரிபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திபெலே, மாதநாயக்கனஹள்ளி போலீஸ் நிலையங்களில் தலா வழக்கும் பதிவாகி உள்ளது.
ஆண்டுகள் அடிப்படையில் 2018-ல் 2 வழக்குகளும், 2019-ல் ஒரு வழக்கும், 2020-ல் 2 வழக்குகளும், 2021-ல் 21 வழக்குகளும், 2022-ம் ஆண்டு ஆகஸ்டு வரை 54 வழக்குகளும் பதிவாகி உள்ளது. மொத்தம் பதிவான 75 வழக்குகளில் இதுவரை 6 வழக்குகளில் மட்டுமே தீர்வு காணப்பட்டு உள்ளது. 69 வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது.