கேரளா: திருச்சூரில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
|70 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்துக்கு சீல் வைத்தனர்.
திருச்சூர்,
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 'குழிமந்தி' சாப்பிட்ட சுமார் 70 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் மாவட்டம் மூணுபீடிகை என்ற பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று முன்தினம் உணவருந்திய சுமார் 60 முதல் 70 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, அந்த உணவகத்தில் 'குழிமந்தி' எனப்படும் உணவுடன் வழங்கப்பட்ட மயோனைஸை சாப்பிட்டதே உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்று தெரிவித்தனர். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்துக்கு சீல் வைத்தனர்.