ரசகுல்லா சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி
|உத்தரப் பிரதேசத்தில் திருமண விருந்தில் ரசகுல்லா சாப்பிட்ட 70 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கன்னோஜ்,
உத்தரப் பிரதேசம் மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள மதர்பூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண விருந்தில் சாப்பிட்ட குழந்தைகள் உட்பட சுமார் 70 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருமண விருந்தில் உணவை உட்கொண்ட 200-க்கும் மேற்பட்டோரில் சுமார் 70 பேருக்கு அங்கு பரிமாறப்பட்ட ரசகுல்லாவை சாப்பிட்ட பிறகு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அர்சூ (1), யூசுப் (2), ஷிஃபா (4), அஸ்ரா (5), சாசியா (7), இர்பான் கான் (48), சுல்தான் (52), மற்றும் ரியாசுதீன் (55) ஆகியோர் உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களது உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும் சிலர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சக்தி பாசு கூறினார்.