குஜராத்தில் சிறுத்தை தாக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு
|குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி 7 வயது சிறுமி உயிரிழந்தார்.
ஜுனாகத்,
குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள சோனார்டி கிராமத்தில் நேற்று சிறுத்தை தாக்கியதில் ஏழு வயது சிறுமி உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வந்தலி ரேஞ்ச் வன அதிகாரி எல்.எச்.சுஜேத்ரா கூறும்போது, மன்னத் ரத்தோட் என்ற 7 வயது சிறுமி பள்ளியிலிருந்து திரும்பியதும் தனது தாத்தா, பாட்டியுடன் துணி துவைக்க ஆற்றுக்குச் சென்றாள். அப்போது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்றது.
இதையடுத்து சிறுமியின் தாத்தா, பாட்டி கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள், சிறுத்தையின் பிடியில் இருந்து சிறுமியை விடுவிப்பதற்காக கற்களை வீசினர். பின்னர், கிராம மக்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாக அறிவித்தனர். காலை 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.
சிறுத்தையைப் பிடிக்க அப்பகுதியில் நான்கு முதல் ஐந்து கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.