கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற 7 பேர் கைது
|கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற 7 பேரை போலீசாா் கைது செய்தனா்.
எலகங்கா
பெங்களூரு எலகங்கா உபநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் என்று தெரிந்தது.
அவர்களிடம் சோதனை நடத்திய போது கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒடிசாவில் இருந்து பெங்களூருவுக்கு ரெயில் மூலமாக கஞ்சா கடத்தி வந்து 3 பேரும் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.
கல்லூரி மாணவர்கள், வியாபாரிகளுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் எலகங்கா உபநகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று, கொடிகேஹள்ளி போலீசார், கல்லூரி மாணவர்கள், கம்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு ஹெராயின் போதைப்பொருளை விற்று வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து எலகங்கா உபநகர், கொடிகேஹள்ளி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.