இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் 69 சதவீதம் பேர் பாதிப்பு
|இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் 69 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பருவநிலை மாற்றம் உலகையே அச்சுறுத்தி வரும் மிகப்பெரும் சவாலாக மாறி இருக்கிறது. இந்த பருவநிலை மாற்றம் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் தொடர்பாக உலக பொருளாதார மன்றம் 34 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தியது. இதில் 23,507 பேர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த ஆய்வில் பாதிக்கு மேற்பட்டோர், அதாவது 56 சதவீதத்தினர் தாங்கள் வாழும் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்கனவே மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிவித்து உள்ளனர்.
இதைப்போல 22 நாடுகளில் இருந்து பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்தவகையில் இந்தியாவில் 69 சதவீதம் பேர், தங்கள் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரிய விளைவுகள் ஏற்பட்டதாக கூறியுள்ளனர். அத்துடன் அடுத்த 25 ஆண்டுகளில் தங்கள் இருப்பிடத்தை விட்டு குடும்பத்துடன் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்படும் என்ற அச்சத்தையும் பகிர்ந்து இருக்கின்றனர்.