பெங்களூருவில் விதிமுறைகளை மீறியதாக ஆட்டோ டிரைவர்கள் மீது 670 வழக்குகள் பதிவு
|பெங்களூருவில் விதிமுறைகளை மீறியதாக ஆட்டோ டிரைவர்கள் மீது 670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.3.36 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்கள் விதிமுறைகளை மீறி வருவதாக போக்குவரத்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. குறிப்பாக அதிக கட்டணம் வசூலித்தல், பயணிகள் அழைக்கும் பகுதிக்கு வர மறுப்பது உள்ளிட்ட விதிமுறைகளை மீறி வந்தனர். இதையடுத்து, விதிமுறைகளை மீறும் ஆட்டோ டிரைவர்களை பிடிக்க போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். கடந்த 14-ந் தேதி தொடங்கிய இந்த சோதனை நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. அப்போது விதிமுறைகளை மீறி ஆட்டோக்கள் ஓட்டியதாக 670 டிரைவர்கள் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
அவற்றில் பயணிகள் அழைத்த இடத்திற்கு வரமறுத்ததாக 316 ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1.58 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல், மீட்டர் போடாமல் அதிக கட்டணம் வசூல் செய்ததாக 354 ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1.78 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக ரூ.3.36 லட்சம் அபராதம் வசூலாகி இருப்பதுடன், விதிமுறைகளை மீறிய ஆட்டோ டிரைவர்கள் மீது 670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விதிமுறைகளை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது புகார் அளிக்கும்படியும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.