< Back
தேசிய செய்திகள்
7 தேசிய கட்சிகளுக்கு பெருமளவிலான வருமானம், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வருமானம் - ஆய்வில் தகவல்
தேசிய செய்திகள்

7 தேசிய கட்சிகளுக்கு பெருமளவிலான வருமானம், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வருமானம் - ஆய்வில் தகவல்

தினத்தந்தி
|
11 March 2023 10:20 PM IST

கடந்த 2021-22-ம் ஆண்டில் 7 தேசிய கட்சிகளுக்கு பெருமளவிலான வருமானம், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வந்துள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

7 தேசிய கட்சிகளின் வருவாய்

நாட்டின் 7 தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மேகாலயாவை சேர்ந்த தேசிய மக்கள் கட்சி ஆகியவை கடந்த 2021-22-ம் நிதியாண்டில் பெற்ற வருவாய் குறித்த விவரம் வௌியிடப்பட்டிருக்கிறது. அதிகாரபூர்வ தகவல்களை சுட்டிக்காட்டி இந்த விவரத்தை தேர்தல் சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 7 தேசிய கட்சிகளும், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் மொத்தமாக ரூ.2 ஆயிரத்து 172 கோடி பெற்றுள்ளன. இது அந்தக் கட்சிகளின் மொத்த வருவாயில் 66 சதவீதம் ஆகும்.

தேர்தல் பத்திரங்கள் மூலம்

அதேநேரம், அறியப்படாத ஆதார வருவாயில் ஆயிரத்து 811 கோடி ரூபாய், அதாவது 83 சதவீதம், தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்திருக்கிறது. அறியப்படாத ஆதார வருவாயை இந்த கட்சிகள் தங்களின் வருடாந்திர தணிக்கை அறிக்கையில் தெரிவித்திருக்கின்றன. ஆனால் எங்கிருந்து அந்த வருமானம் வந்தது என்ற விவரத்தை வெளியிடவில்லை. ஆனால் அறியப்படாத ஆதாரத்தில், தேர்தல் பத்திரங்கள், கூப்பன்கள் விற்பனை, நிவாரண நிதி, மற்ற வகை வருவாய்கள், தன்னார்வ பங்களிப்புகள், கூட்டங்களின்போது திரட்டப்படும் வருவாய் போன்றவை அடங்கும்.

பா.ஜ.க.

கடந்த நிதியாண்டில் தங்களுக்கு ஆயிரத்து 161 கோடி ரூபாய், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வந்ததாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இது மற்ற 6 தேசிய கட்சிகளின் அறியப்படாத ஆதார மொத்த வருவாயைவிட ரூ.150 கோடி அதிகமாகும்.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தேசியக் கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் அடங்கும் என்றாலும், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் தாங்கள் எந்த நன்கொடையையும் பெறவில்லை என்று அக்கட்சி தெரிவித்துவிட்டது.

தெரிவிக்க தேவையில்லை

கட்சிகளுக்கு ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக நிதி வழங்கும் தனிநபர்கள் அல்லது அமைப்புகள் மற்றும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்போர் குறித்த விவரத்தை தற்போது அரசியல் கட்சிகள் தெரிவிக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்