தேசிய புலன் விசாரணை அமைப்பால் 4 ஆண்டுகளில் 497 பயங்கரவாத வழக்குகள் பதிவு - மத்திய மந்திரி
|தேசிய புலன் விசாரணை அமைப்பால் 497 பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மாநிலங்களவையில் மத்திய மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
புதுடெல்லி,
மாநிலங்களவையில் நேற்று ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த் ராய் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், '2019-ம் ஆண்டு முதல் கடந்த 2-ந் தேதி வரை, கோவை குண்டுவெடிப்பு உள்பட 497 பயங்கரவாத வழக்குகள் தேசிய புலன் விசாரணை அமைப்பால் (என்.ஐ.ஏ.) பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் 67 வழக்குகளில் 65-ல் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 வழக்குகளில் மட்டும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது என்.ஐ.ஏ.வின் விசாரணையில் உள்ள நேர்மையையும், வெளிப்படைத்தன்மையையும் காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.
பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று 2022-23-ம் ஆண்டுக்கான துணை மானியக் கோரிக்கையின் முதலாவது பகுதி விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர், 'நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி பணவீக்கத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்துவதற்கான இலக்கை சாதிக்க முடியும்' என்றார்.
பிற்பாடு, 2023-ம் நிதியாண்டில் அரசு ரூ.3.25 லட்சம் கோடி கூடுதல் செலவு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கும் துணை மானியக் கோரிக்கை, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தரக்குறைவான பதிவுகள்-15 வழக்குகள்
மந்திரி ஜிதேந்திர சிங் மற்றொரு கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், அரசு குறித்தும், அரசியல்சாசன உயர்பதவி வகிப்பவர்கள் குறித்தும் தரக்குறைவான பதிவுகள் வெளியிட்டது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு முதல் 15 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.
அவற்றில் 6 வழக்குகள் விசாரணையில் உள்ளன. மற்ற 9 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 28 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
20 அணுமின் நிலையங்கள்
மந்திரி ஜிதேந்திர சிங் மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில், வருகிற 2031-ம் ஆண்டுவாக்கில் நாட்டில் 20 அணுமின் நிலையங்கள் தொடங்கப்படும். அவற்றின் மூலம் 15 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்தார்.