< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் ரூ.60 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்
தேசிய செய்திகள்

பெங்களூருவில் ரூ.60 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
7 July 2023 12:15 AM IST

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வி.வி.புரம்:-

ராஜஸ்தானில் இருந்து கடத்தல்

பெங்களூரு வி.வி.புரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை வழிமறித்து சோதனை நடத்தினார்கள். அந்த ஆட்டோவுக்குள் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த நபருக்கு 55 வயது இருக்கும். அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஓபிஎம் என்ற போதைப்பொருளை அவர் வாங்கியுள்ளார். அந்த போதைப்பொருட்களை ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவுக்கு கூரியர் மூலமாக கடத்தி வந்துள்ளார்.

ரூ.60 லட்சம் போதைப்பொருட்கள்

பின்னர் அந்த போதைப்பொருட்களை இரவில் தனது வீட்டில் வைத்து பொடியாக்கி, அதனை பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து அவர் விற்பனை செய்திருக்கிறார். பெங்களூருவில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கும் அவர் விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தார். போதைப்பொருட்கள் விற்று கிடைக்கும் பணத்தில் அந்த நபர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

கைதான நபரிடம் இருந்து 55 கிலோ போதைப்பொருட்கள், ஒரு சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைதானவர் மீது வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்