< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் புதிதாக 6 மகளிர் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும்
தேசிய செய்திகள்

பெங்களூருவில் புதிதாக 6 மகளிர் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும்

தினத்தந்தி
|
8 July 2023 2:21 AM IST

நடப்பு ஆண்டு இறுதிக்குள் தரம் உயர்த்தப்பட்ட 2,125 போலீஸ் குடியிருப்பு பணிகள் முடிக்கப்படும் என சித்தராமையா கூறினார்.

பெங்களூரு:-

மகளிர் போலீஸ் நிலையம்

கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ள போலீஸ் துறைக்கான திட்டங்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:-

கர்நாடகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க முக்கியத்துவம் வழங்கப்படும். போலீசாருக்கு தரம் உயர்த்தப்பட்ட குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படும்.

ரூ.450 கோடி செலவில் 2,125 போலீஸ் குடியிருப்புகள் நடப்பு ஆண்டுக்குள் கட்டி கொடுக்கப்படும். ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படும். நடப்பு ஆண்டில் பழைய போலீஸ் நிலைய கட்டிடங்கள் ரூ.10 கோடி செலவில் சீரமைக்கப்படும். பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பெங்களூருவில் மட்டும் 5 போக்குவரத்து மற்றும் 6 மகளிர் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும் 2 கட்டங்களாக 2,454 போலீஸ் காவலர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படும்.

கேமராக்கள்

குற்றச்சம்பவங்களை விசாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சி.ஐ.டி., சைபர் கிரைம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போன்ற துறைகளுக்கான போலீஸ் நிலையங்கள் ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும். பயிற்சி பெறும் போலீசார் வசதிக்காக போலீஸ் பயிற்சி பள்ளிகள் ரூ.20 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும். டிரோன் கேமரா, போக்குவரத்து போலீசார் பயன்படுத்தும் சிறிய ரக கேமராக்கள் மற்றும் சாலை கண்காணிப்பு கேமராக்களை கூடுதலாக கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

பெங்களூரு மத்திய சிறையில் உள்ளதுபோல் மற்ற மத்திய சிறைகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 5 மத்திய சிறைகளில் காண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை கைதிகளுடன், நீதிபதிகள் வீடியோ காணோலி வாயிலாக விசாரணை மேற்கொள்வதற்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள மாநில சிறை அகாடமியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு நிலையங்கள்

கே.சேப் திட்டத்தின் கீழ் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையை கொண்டு தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்படும். மேலும் எலகங்கா, பட்கல், நாகரபாவி, என்.ஆர்.புரா, சிராஹட்டி, ஒன்னாவர், தேவனஹள்ளி விண்வெளி தொழிற்சாலை பகுதி ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

மேலும் உயர் அழுத்தம் கொண்ட தண்ணீர் பீய்ச்சும் வாகனங்கள், தீயணைப்பான்கள் உள்ளிட்டவை ரூ.3 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்