ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகள் இடைநீக்கம்
|உப்பினங்கடியில் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த ௬ முஸ்லிம் மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மங்களூரு:
கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து மாநில அரசும், கர்நாடக ஐகோர்ட்டும், பள்ளி-கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் மத அடையாள ஆடைகள் அணியக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் தலைத்தூக்க தொடங்கி உள்ளது. முன்பு ஹிஜாப் பிரச்சினை எழுந்த கடலோர மாவட்டத்தில் தான் மறுபடியும் இந்த பிரச்சினை எழுந்துள்ளது. மங்களூருவில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் 5 நாட்களாக கல்லூரிக்கு வராமல் வகுப்புகளை புறக்கணித்து வருகிறார்கள்.
இதேபோல், உப்பினங்கடியில் உள்ள அரசு கல்லூரியில் 6 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்தனர். நேற்றும் அவர்கள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அப்போது இந்து மாணவர்கள் தாங்கள் காவி ஆடை அணிந்து வருவோம் என்று கூறினர். இதையடுத்து ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளையும் ஒரு வாரம் இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.