உத்தரப்பிரதேசத்தில் கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
|உத்தரப்பிரதேச மாநிலம் விஷம்பர்பூரில் கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கார் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த சோனு ஷா (வயது 28) என்பவர் நைனிடாலில் உள்ள ஒரு காகித ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று மாலை தனது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் காரில் தனது கிராமத்திற்குச் சென்றார்.
இன்று அதிகாலையில் ஸ்ரீதத்கஞ்ச் காவல் நிலையத்திற்குட்பட்ட விஷம்பர்பூர் கிராமத்திற்கு அருகில் கார் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் சோனு ஷா, அவரது மனைவி சுஜாவதி (25), அவர்களது குழந்தைகள் ருச்சிகா (6), திவ்யான்ஷி (4), அவரது சகோதரர் ரவி (18), சகோதரி குஷி (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ள போலீசார், அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர்களது கார் மீது மோதிய வாகனத்தை அடையாளம் கண்டு பறிமுதல் செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.