இமாசல பிரதேசத்தில் வெள்ளத்திற்கு 6 பேர் பலி; கடும் போக்குவரத்து பாதிப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை
|இமாசல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
சிம்லா,
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவமழையை முன்னிட்டு பெய்து வரும் கனமழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அசாமில் வெள்ளத்திற்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால், சாலை முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.
இந்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பொதுமக்களில் 6 பேர் உயிரிழந்தும், 10 பேர் காயமடைந்தும் உள்ளனர். 303 விலங்குகளும் உயிரிழந்து உள்ளன என பேரிடர் மேலாண் முதன்மை செயலாளர் ஓங்கார் சந்த் சர்மா கூறியுள்ளார்.
கனமழைக்கு ரூ.3 கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டு இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 124 சாலைகள் சேதமடைந்து உள்ளன. அவற்றில் 2 தேசிய நெடுஞ்சாலைகளும் அடங்கும்.
இதேபோன்று, மாண்டி நகரில் சண்டிகார்-மணாலி நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் 7 மைல் தொலைவுக்கு மணிக்கணக்கில் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இமாசல பிரதேசத்தில் இன்றும், நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. சுற்றுலாவாசிகள் பல பேர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.