உத்தரபிரதேசத்தில் மின்சாரம் பாய்ந்து 6 பக்தர்கள் பலி- மின்கம்பியில் வாகனம் உரசியதால் பரிதாபம்
|இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீரட்,
வட மாநிலங்களில் ஷிரவன் மாதத்தையொட்டி சிவ பக்தர்களால் புனித யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு யாத்திரை செல்லும் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து வருவது வழக்கம். அந்தவகையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள பவன்பூர் பகுதியில் இருந்து சென்ற பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் திரும்பிக்கொண்டு இருந்தனர்.
அப்போது தாழ்வாக தொங்கிக்கொண்டிருந்த உயர்மின் அழுத்தக்கம்பியின் மீது சிவ பக்தர்களின் வாகனம் எதிர்பாராதவிதமாக உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்த போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரில் 5 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்கள். இந்நிலையில் நேற்று ஒருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதையடுத்து மின்சாரம் பாய்ந்து இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே புனித யாத்திரை சென்ற பக்தர்களின் வாகனம் மீது மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலியானது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.