மேற்கு வங்காளம்: சட்டசபையில் இருந்து 6 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்
|பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கும்பல் பலாத்காரமாக நிலத்தை கைப்பற்றியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டி, ஏராளமான பெண்கள் கடந்த சில நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ஊழல் செய்ததாக அவரது வீட்டில் சோதனை நடத்தச்சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் ஷாஜகான் தலைமறைவாக உள்ளார்.
இந்த நிலையில் சந்தேஷ்காலியில் நிலவும் அமைதியின்மையை சுட்டிக்காட்டி ஷாஜகானை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மேற்கு வங்காள சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியதில் இருந்து, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாஜக எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவர திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சோபந்தேப் சட்டர்ஜி முன்மொழிந்தார். இதற்கு அனுமதி அளித்த சபாநாயகர் பிமன் பானர்ஜி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 6 பா.ஜ.க. எம்.எல்.ஏக்களை இடைநீக்கம் செய்தார்.
அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, அக்னிமித்ர பால், மிஹிர் கோஸ்வாமி, பங்கிம் கோஷ், தபசி மோண்டல் மற்றும் ஷங்கர் கோஷ் ஆகியோர் தற்போதைய அமர்வின் மீதமுள்ள பகுதி அல்லது 30 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.