காஷ்மீர் சட்டசபை 2-வது கட்ட தேர்தலில் 57.03 சதவீத வாக்குப்பதிவு
|காஷ்மீர் சட்டசபைக்கான 2-வது கட்ட தேர்தலில் 57.03 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஸ்ரீநகர்,
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்தது. அதில், 61 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், நேற்று 2-வது கட்ட தேர்தல் நடந்தது. 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 3 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள் பணியில் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.வாக்குப்பதிவு நடந்த 6 மாவட்டங்களில் ஜம்மு பிராந்தியத்தில் 3 மாவட்டங்களும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. ஜம்மு பிராந்தியத்தில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இந்த நிலையில், 2-ஆம் கட தேர்தலில் 57.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.