< Back
தேசிய செய்திகள்
விழா நாட்களில் திருப்பதியில் 5.68 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
தேசிய செய்திகள்

விழா நாட்களில் திருப்பதியில் 5.68 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
6 Oct 2022 2:50 PM IST

பிரம்மோற்சவ விழா நாட்களில் திருப்பதியில் 5.68 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. முதல் நாளான அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத் தொடர்ந்து தினமும் காலை மாலை பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. கடந்த 1-ந் தேதி கருட சேவை நடந்தது. பிரம்மோற்சவ விழா தொடங்கியது முதல் நேற்று வரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 735 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 2 லட்சத்து 20 ஆயிரத்து 816 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 20 லட்சத்து 99 ஆயிரத்து 96 பக்தர்கள் அன்னபிரசாதம் சாப்பிட்டனர். 24 லட்சத்து 89 ஆயிரத்து 481 சிறிய லட்டுக்களும், 29 ஆயிரத்து 968 பெரிய லட்டுக்களும் விற்பனையானது. ரூ.20 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 400 உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு 3 லட்சத்து 47 ஆயிரத்து 226 பக்தர்களும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 4 லட்சத்து 47 ஆயிரத்து 969 பக்தர்களும் பஸ்சில் பயணம் செய்தனர். குற்ற சம்பவங்களை கண்காணிக்க திருமலையில் 2,279 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் 4,635 போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆந்திராவில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக 140 பஸ்களில் அழைத்து வரப்பட்டு 61,997 சாமானிய பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதியில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.300 கட்டண சேவை சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ஆகிய தரிசனங்கள் இன்று மீண்டும் தொடங்கியது. இந்த தரிசனங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்