ராஜஸ்தானில் இளைஞரின் வயிற்றில் இருந்து 56 துண்டு பிளேடுகள் அகற்றம்
|ராஜஸ்தானில் இளைஞரின் வயிற்றில் இருந்து 56 துண்டு பிளேடுகள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளன.
ஜலோர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த யஷ்பால் சிங் (வயது 26) என்ற இளைஞர் 56 துண்டு பிளேடுகளை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யஷ்பால் சிங் பிளாஸ்டிக் கவருடன் மூன்று பாக்கெட்டு பிளேடுகளை விழுங்கியுள்ளார். இந்த நிலையில் வயிற்றுக்குள் சென்றதும் பிளேடுகளைச் சுற்றியிருந்த பிளாஸ்டிக் கவர் கரைந்து கடுமையான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டது.
ரத்த வாந்தி எடுத்து வயிற்று வலியால் துடித்த அவரை, அறையிலுள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சோனோகிராபி எடுத்து பார்த்ததில் அவரது உடலில் பிளேடுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் எண்டோஸ்கோபி செய்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
அந்த இளைஞரின் கழுத்தில் பலத்த வெட்டு காயங்களும், உடல் முழுவதும் வீக்கமும் இருந்தது. இந்த நிலையில் 7 பேர் கொண்ட டாக்டர்கள் குழு அறுவை சிகிச்சை செய்து 3 மணி நேரத்தில் வயிற்றில் இருந்த அனைத்து பிளேடுகளையும் அகற்றினர்.
பதட்டம் அல்லது மனச்சோர்வு காரணமாக இளைஞர் இவ்வாறு பிளேடுகளை விழுங்கியிருக்கலாம் என்று டாக்டர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.