< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் தினமும் 5,500 குழந்தைகள் புகையிலை பழக்கத்துக்கு அடிமை - நிபுணர் தகவல்
தேசிய செய்திகள்

இந்தியாவில் தினமும் 5,500 குழந்தைகள் புகையிலை பழக்கத்துக்கு அடிமை - நிபுணர் தகவல்

தினத்தந்தி
|
11 March 2023 4:53 AM IST

இந்தியாவில் தினமும் 5,500 குழந்தைகள், புகையிலை பழக்கத்துக்கு அடிமை ஆவதாக நிபுணர் ஒருவர் கூறினார். புகையிலை பழக்கத்துக்கு ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் இறப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட முதன்மை விசாரணை அதிகாரியும், பிரபல தொற்றுநோயியல் நிபுணருமான நரேஷ் புரோகித் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-


அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்களில் உலக அளவில் 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இங்கு 26 கோடியே 80 லட்சம்பேர் புகையிலை பயன்படுத்துகிறார்கள். இளைஞர்களும், படிப்பறிவு இல்லாதவர்களும் பீடி, ஹூக்காவுக்கு பதிலாக சிகரெட்டுக்கு மாறிவிட்டார்கள். மேல்தட்டு மக்கள், சிகரெட்டுக்கு பதிலாக சிகாருக்கு மாறிவிட்டார்கள். ஆனால், சிகாரில், புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில், தினமும் 5 ஆயிரத்து 500 குழந்தைகள், புகையிலை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர், புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், ஆஸ்துமா போன்ற பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பிறர் புகைக்கும்போது, பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களுக்கும் அதே தீங்கு ஏற்படும். அவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு சுவாச தொற்று ஏற்படும்.

ஓட்டல், உணவகம், விமான நிலையம் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் புகை பிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த பகுதிகளை ரத்து செய்து, பொது இடங்களில் 100 சதவீத தடை விதிக்க வேண்டும். அப்போதுதான், பாதிப்புகளை குறைக்க முடியும்.

புகை பிடிப்பதால், இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன. பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களில் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். புகையில்லா புகையிலையை பயன்படுத்துவதால், 35 ஆயிரம்பேர் பலியாகிறார்கள்.

இந்தியாவில் புற்றுநோய் மரணங்களில் 27 சதவீத மரணங்கள், புகையிலை பயன்பாட்டால் ஏற்படுகின்றன. புகையிலையில் இருந்து உருவாகும் புகையில் புற்றுநோயை உருவாக்கும் 80 காரணிகள் இருக்கின்றன.

பெண்களுக்கு கூட புகையிலை பழக்கத்தால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஏற்படுகின்றன. புகை பழக்கத்தை விட முடியாதவர்கள், மனநல ஆலோசகரை அணுகினால் பலன் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்