< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் போதை விருந்தில் பங்கேற்ற இளம்பெண்கள் 55 பேர் கைது
தேசிய செய்திகள்

பெங்களூருவில் போதை விருந்தில் பங்கேற்ற இளம்பெண்கள் 55 பேர் கைது

தினத்தந்தி
|
19 Jun 2023 12:15 AM IST

பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் உள்ள விடுதியில் போதை விருந்தில் ஈடுபட்ட ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம்பெண்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:-

போதை விருந்து

பெங்களூரு எம்.ஜி. ரோட்டில் ஏராளமான மதுபான விடுதிகள் உள்ளன. இந்த நிலையில் எம்.ஜி. ரோட்டில் உள்ள மதுபான விடுதிகளில் விபசாரம் மற்றும் போதைப்பொருட்களுடன் போதை விருந்து நடப்பதாக கப்பன் பூங்கா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பெங்களூரு மத்திய மண்டல உதவி போலீஸ் கமிஷனர் சீனிவாச கவுடா தலைமையில் 60 பேர் கொண்ட போலீசார் 3 குழுக்களாக பிரிந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் அவர்கள் பிரிகேட் சாலை, எம்.ஜி.ரோடு மெட்ரோ, சர்ச் சாலை என 3 பக்கங்களிலும் சாலைகளை மூடினர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மதுபான விடுதிக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுபானம் அருந்தி கொண்டு ஏராளமான வெளிநாட்டினர் இருந்தனர். குறிப்பாக ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் அதிகம் இருந்தனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்தவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசிடம் இருந்து தப்பித்து ஓடினர். எனினும் போலீசார் 55 வெளிநாட்டினரை கைது செய்தனர். இதில் 25 பேர் இளம்பெண்கள் ஆவார்கள்.

போதைப்பொருள் பயன்பாடு

அவர்களை பிடித்து உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் அவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 55 பேரின் பாஸ்போர்ட்டு மற்றும் விசா ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக மது அருந்திய பெண்கள் சிலர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷனர் சீனிவாச கவுடா கூறுகையில், 'பெங்களூருவில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து கொண்டு செல்கிறது. இதுகுறித்த ரகசிய தகவல்களின்பேரில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் அவை குறைந்தபாடில்லை. எம்.ஜி.ரோட்டில் உள்ள மதுபான விடுதியில் நடைபெற்ற போதை விருந்தில் வெளிநாட்டினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றார்.

மேலும் செய்திகள்