< Back
தேசிய செய்திகள்
பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5,300 கோடி நிதி
தேசிய செய்திகள்

பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5,300 கோடி நிதி

தினத்தந்தி
|
2 Feb 2023 1:45 AM IST

பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

நீர்ப்பாசன திட்டங்கள்

மத்திய பட்ஜெட்டில் பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5,300 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹாவோியில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு நாங்கள் வரைவு திட்டத்தை அனுப்பினோம். இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் அந்த திட்டத்திற்கு ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கர்நாடகத்தின் முக்கியமான நீர்ப்பாசன திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தால் மத்திய கர்நாடகத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும்.

தேசிய திட்டம்

இங்கு குடிநீர் திட்டமும் அமல்படுத்தப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள். கர்நாடகத்தில் முதல் முறையாக ஒரு தேசிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மத்திய அரசு, பிரதமர் மோடி, நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பைதகி தொழில் வழித்தட திட்டத்திற்கு விவசாயிகளில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு பாசன வசதியுள்ள நிலத்தை கையகப்படுத்த மாட்டோம். பயன்படுத்தாத தரிசு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நோக்கத்தில் தான் நாங்கள் நிலத்தை கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்றோம். இந்த திட்டத்திற்கு வேறு இடத்தில் நிலத்தை அடையாளம் காணும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்