டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்; அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
|சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாளில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்சில் ஜாக் கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.
இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 500-வது விக்கெட்டாக பதிவானது. இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் அஸ்வினின் இந்த சாதனைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,
'500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அசாதாரண மைல்கல்லுக்கு ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள்! அவரது பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். அவர் மேலும் சிகரங்களைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துகள்' என பதிவிட்டுள்ளார்.