< Back
தேசிய செய்திகள்
கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த போது இடையூறு:  5 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை - தாய் வெறிச்செயல்
தேசிய செய்திகள்

கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த போது இடையூறு: 5 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை - தாய் வெறிச்செயல்

தினத்தந்தி
|
10 Feb 2024 3:48 AM IST

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.

உப்பள்ளி,

தார்வார் டவுன் கமலாபுரா கூகார் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (வயது26). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 5 வயதில் சகானா என்ற மகள் உண்டு. இவள் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவாள். ஜோதியின் கணவர் தார்வாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ஜோதிக்கும் அதேப்பகுதியை சேர்ந்த ராகுல் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி வெளியூர் சென்று வந்தனர். அப்போது அங்கு அறை எடுத்து தங்கி ஜோதி, ராகுல் ஆகியோர் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் ராகுல், ஜோதி வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போதும் அவர்கள் 2 பேரும் ஜாலியாக பேசி வந்துள்ளனர். அப்போது இவர்கள் 2 பேரும் பேசுவதற்கு ஜோதியின் மகள் சகானா இடையூறாக இருந்துள்ளாள்.

இதனால் தனது மகளை ஜோதி அடித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜோதியின் கணவர் வீட்டில் இல்லை. இதையடுத்து ஜோதி, ராகுலின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். அதில் கணவர் வீட்டில் இல்லை உடனே வீட்டிற்கு வா என்று கூறினார். இதனை கேட்ட ராகுல் சிறிது நேரத்தில் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றார்.

அங்கு 2 பேரும் பேசி கொண்டு இருந்தனர். பின்னர் ராகுல், ஜோதி ஆகியோர் படுக்கை அறைக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது சகானா தொடர்ந்து அழுதுள்ளாள். இந்த சத்தம் கேட்டு வந்த ஜோதி சகானாவை திட்டிவிட்டு சென்றுள்ளார். ஆனால் சகானா விடாமல் அழுது கொண்டே இருந்துள்ளாள். இதையடுத்து ஜோதி தனது மகளை தாக்கி உள்ளார். பின்னர் ராகுல் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

இந்தநிலையில், கள்ளக்காதலுக்கு தனது மகள் இடையூறாக உள்ளாள். எனவே அவளை தீர்த்து கட்ட வேண்டும் என ஜோதி முடிவு செய்தார். அதன்படி தூங்கி கொண்டிருந்த சகானாவை கையால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த தார்வார் உபநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் சகானாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஜோதி தான் தனது பெற்ற மகள் சகானாவை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஜோதியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக சகானா இருந்ததால் அவளை கொன்றேன் என ஜோதி வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் போலீசார் ஜோதியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்