ஆட்டோ-லாரி மோதி கோர விபத்து; 5 பெண்கள் உடல் நசுங்கி சாவு
|பீதர் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய கோர விபத்தில் 5 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
5 பெண்கள் சாவு
பீதர் மாவட்டம் சிடகுப்பா தாலுகா பெமலிகோட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலையில் ஒரு ஆட்டோ, பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது அதே நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக லாரியும், ஆட்டோவும் மோதிக் கொண்டன. லாரி மோதிய வேகத்தில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கி சேதம் அடைந்தது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் பெமலிகோட்டா போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள்.
லாரி டிரைவரின் கவனக்குறைவு
அங்கு 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஒரு சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் பீதர் மாவட்டம் பிடமனல்லி கிராமத்தை சேர்ந்த பிரபாவதி, யாதம்மா, கங்கவ்வா, ஜக்கம்மா மற்றும் ருக்மணி(வயது 60) ஆகிய 5 பேரும் உடல் நசுங்கி பலியானது தெரியவந்தது. ஆட்டோ டிரைவர் உள்பட 11 பேரும் எங்கு சென்று விட்டு வந்தனர் என்ற தகவல்கள் தெரியவில்லை.
லாரி டிரைவரின் கவனக்குறைவு மற்றும் அதிவேகம் விபத்திற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெமலிகோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து பீதரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.