< Back
தேசிய செய்திகள்
5 மாநில சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ.க., காங்கிரஸ் தலா 3 இடங்களில் வெற்றி
தேசிய செய்திகள்

5 மாநில சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ.க., காங்கிரஸ் தலா 3 இடங்களில் வெற்றி

தினத்தந்தி
|
2 March 2023 11:46 PM GMT

5 மாநிலங்களில், 6 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ.க.வும், காங்கிரசும் தலா 3 இடங்களில் வெற்றி பெற்றன.

புதுடெல்லி,

3 மாநில சட்டசபை தேர்தலுடன், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அருணாசலபிரதேசம், மராட்டியம், ஜார்கண்ட் ஆகிய 5 மாநிலங்களில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன.

இங்கு வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

* தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் ஆளும் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார்.

* மேற்கு வங்காளத்தில் சாகர்டிகி சட்டசபை தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தேபாஷிஷ் பானர்ஜி, காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.

* அருணாசலபிரதேச மாநிலம், லும்லா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஷெரிங் லாமு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட்-மராட்டியம்

* ஜார்கண்ட் மாநிலம், ராம்கார் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் யூனியன் கட்சி (ஏஜேஎஸ்யுபி) வேட்பாளர் சுனிதா சவுத்ரி தன்னை எதிர்த்து ஜார்கண்ட் முக்திமோர்ச்சா ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பஜ்ரங் மஹட்டோவை 21 ஆயிரத்து 970 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இங்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

* மராட்டியத்தில் கஸ்பாபேத் மற்றும் சிஞ்ச்வாடு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் கஸ்பாபேத் தொகுதியில் ஆளும் சிவசேனா ஷிண்டே ஆதரவுடன் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஹேமந்த் நாராயண் ரசானே தோல்வியைத் தழுவினார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் தாங்கேகர் ரவீந்திர ஹேமராஜ் 10 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

* சிஞ்ச்வாடு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் அஷ்வினி லட்சுமன் ஜெகதீப் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் விட்டால் என்ற நானா கடேயை சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

தலா 3 இடங்கள்

5 மாநிலங்களில் 6 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க.வும், காங்கிரசும் தலா 3 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்